13 November 2014

பங்கிலும் நீதான் கிங்கு....2

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது,முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500535386.


சென்ற பதிவில் ஒரு நல்ல இடத்தை ஊகத்தின் அடிப்படையில் வாங்காமல், உண்மையிலேயே  சந்தை விலையினை விடக் குறைவாக நல்ல விலையில் வாங்கினால் தான் லாபம் என்று பார்த்தோம். அவ்வாறு ஒரு பங்கினையும் வாங்க உதவுவதே   PE RATIO  என்பதினையும் பார்த்தோம்.
இப்பொழுது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம், இல்லை வராமல் கூட இருக்கலாம். ஒரு பங்கின் விலை குறைந்தால் அந்த நிறுவனம் நல்ல படியாக இல்லாத காரணத்தினால், பல பேர் வாங்காமல் இருந்ததால் கூட  விலை குறைந்து இருக்கலாம் என்று கூட தோன்றுகிறது  அல்லவா? ஆம், நீங்கள் சொல்வது போல் நடக்கவும் வாய்ப்பு உண்டு. நீங்கள் சொல்வது ஒரு வாகனம் என்ஜின் பழுதாகி நிற்பது போல . ஒரு வாகனம் அதனால் மட்டும்  நிற்பதில்லை. பெட்ரோல் இல்லாமல் கூட நிற்கலாம் , டயர் பஞ்சர் ஆகி நிற்கலாம், எதனால் அதன் விலை குறைந்தது என்று நாம் கட்டாயம் பார்க்கத்தான் வேண்டும்.

எதனால் அந்த வாகனம் நிற்கிறது என்று, நாம் ஒரு வேலை மெக்கானிக்காக இருந்தால் கண்டுபிடித்து விடலாம், ஆனால் நாம் எப்படிக் கண்டு பிடிப்பது ? அது போல் ஒரு நிருவாகத்தின் பின்னடைவிற்க்கு என்னதான் காரணம் என்று நாம் எப்படிக் கண்டு பிடிப்பது? நான் என்ன அவ்வளவு பெரிய டெக்னிக்கல் அனலிஸ்ட்டா? என்று கூடக் கேட்கலாம்.

நாம் அவ்வளவு பெரிய அப்பா டக்கர் இல்லை தான். ஆனால் நாம் முதலீடு செய்த அதே நிறுவனத்தில் பல அப்பா டக்கர்கள் கட்டாயம் முதலீடு செய்து இருப்பார்கள் இல்லையா? அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்களா? என்று பார்ப்பது கடினமான விஷயம் அல்லவே? நாம் முதல் முதலில் சைக்கிள் ஓட்டிப் பழகும் போது, பின்னால் ஒருவர் துணைக்கு வருவார், அவர் வருகிறாரா? வருகிறாரா? என்று அடிக்கடித் திரும்பிப் பார்ப்போம் அல்லவா? அதுபோல் தான் இதுவும். நாம் அசந்த நேரம் பார்த்து அவர் நம் பின்னால் வராமல் நின்று விடுவார், கொஞ்ச தூரம் சென்று திரும்பிப் பார்ப்போம், அவர் இல்லை என்று தெரிந்ததும் உடனே தொப்பென்று விழுவோம் இல்லையா? அது போல் தான் இதுவும்.

அது மாத்திரம் அல்ல.  சில ஆயிரம் ரூபாய்க்கு வாங்கின நீங்களே உங்கள் பணம் நஷ்ட மாகி விடக் கூடாது என்று கவலைப் படும் போது, பல கோடிகள் முதலீடு செய்த அவர்கள், எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்?

நீங்கள் ஒரு உணவகம் தொடங்கு கிறீர்கள் . நல்ல வியாபாரம், சிறிது நாட்களில் வியாபாரம் மந்தமாக இருந்தால் என்ன காரணம் என்று கண்டுபிடித்து சரி செய்ய நீங்களே முயலும்போது, கோடிகளைக் கொட்டித் தொழில் தொடங்கிய நிறுவனம் அதனைச் சரி செய்ய முயலாமல் இருக்குமா? இங்கு நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நீங்கள் ஒரு ஹோட்டலில் வெறும் 10%  மட்டுமே முதலீடு செய்தால், அந்தச் சூழ்நிலையில் உங்கள் கவனம் ஏனோதானோ  வென்று தான் இருக்கும். நீங்கள் அதிகப் படியான முதலீடு செய்தவர் என்றால்,உங்கள் மெனக்கெடலும் அதிக மாகத் தான் இருக்கும் இல்லையா?

2.  இங்கு நாம் இரண்டு விசயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று அந்த தொழிலைத் தொடங்கியவர்கள் மற்றும் அந்தத் தொழிலில் முதலீடு செய்த நிறுவனங்கள் . இதைத் தான் பங்கு வைத்திருப்பு முறை ( SHARE HOLDING PATTERN - SHP )  என்கிறோம்.

 ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும் முன்னர் கட்டாயம் அந்த நிறுவனம் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும்,  PE RATIO  வை விட அதிகமான விலையில் வாங்கவே வாங்க வேண்டாம்.  PE RATIO  நன்றாக இருந்தால் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் அந்த நிறுவனத்தை தொடங்கியவர்களும், அந்த நிறுவனத்தைக் கூர்ந்து கவனித்து முதலீடு செய்த நிறுவனங்களும் எவ்வளவு பங்கு வைத்து இருக்கிறார்கள் என்பதனைக் கவனிக்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் செயல் பாடு சரி இல்லை எனில், முதலீடு செய்த நிறுவனங்கள் அவர்களின் பங்கினை விற்று விட்டு இடத்தைக் காலி பண்ணி விடுவார்கள். அந்த நிறுவனம் தற்காலிகமாக ஒரு சரிவினைச் சந்தித்தாலும், மீண்டு  வர வாய்ப்பு இருந்தால் மட்டுமே அங்கு இருப்பார்கள். எனவே நாமும் முதலில் நல்ல PE RATIO  உள்ள பங்குகளை  தேர்ந்தெடுத்து, வாங்கு முன் இரண்டாவதாக SHARE HOLDING PATTERN  பற்றியும் கண்காணிக்க வேண்டும். ஒரு பங்கினை வாங்க மிக அடிப்படையான விசயங்களை நாம் பார்க்கத் தவறக்கூடாது.

ஒரு நிறுவனத்தை தொடங்கிய நபர்கள் குறைந்த பட்சம் 50%  பங்குகளையாவது அவர்கள் வசம் வைத்து இருக்க வேண்டும். அது போல் அந்த நிறுவனப் பங்குகளை வைத்து இருக்கும் நிறுவனங்கள் குறைந்த பட்சம் மீதம் உள்ள 50% பங்குகளில் 10% -15% பங்குகளாவது வைத்து இருக்க வேண்டும். FII  எனப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இருப்பதும் இன்னும் சிறப்பு. ஒரு சராசரி மனிதனை நம்பிக் கடன் கொடுக்கும் போது இருக்கும் மனநிலை இருந்தாலே, பங்குச் சந்தையில் பணம் பண்ணப் போதுமானது.


உதாரணமாக : SBI  நிறுவனம் அதன் வசம் இன்றும் 62.31 % பங்குகளைத் தன் வசம் வைத்து உள்ளது. அதனை நம்பி முதலீடு செய்த மீச்சுவல் பண்ட் மற்றும் பிற நிறுவனங்கள் 17.91% பங்குகளைக் கொண்டுள்ளது. FII  என்னும் வெளி நாட்டு நிறுவனங்கள் கூட 8.83% பங்குகளை வைத்து உள்ளது.
 ஒவ்வொரு காலாண்டிலும் நாம் இதனை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். ஒரு சில சதவீதங்கள் கூடவோ குறையவோ செய்யலாம். பெரிய மாறுதல்கள் இருத்தல் கூடாது. DEC2012 - 17.21   MAR2013- 16.04   JUN2013-16.70  SEP2013- 17.68  DEC2013- 17.91 .இதனைப் போன்று சிறு மாறுதல்கள் இருந்தால் பதட்டம் தேவை இல்லை. 

இது எதனைக் குறிக்கிறது எனில், SBI 2013  இல் கண்ட அதிக விலை 2472 .  அப்பொழுது இதனை நம்பி முதலீடு செய்த நிறுவனப் பங்குகள் 16.70 %. அதுபோல் 2013 இல் SBI கண்ட குறைந்தபட்ச விலை 1452 அப்பொழுதும் இதனை நம்பி முதலீடு செய்து இருந்த நிறுவனப் பங்குகள் 17.68 %. இங்கு நாம் கவனிக்க வேண்டியது விலை குறைந்தால் கூட அந்த நிறுவனத்தின் மீது முதலீடு செய்கின்ற நிறுவங்கள் கூடுகிறதே அன்றிக் குறைய வில்லை. எனவே இந்தச் சூழலிலும் இந்த நிறுவனம் மீண்டும் நல்ல விலைக்குச் செல்லும் என்பதனையே காட்டுகிறது.

 நான் சொல்ல வருவது புரிகிறதா? குறைந்த விலை என்பதால் பொறம்போக்கு  நிலத்தை வாங்கக் கூடாது. சில நிறுவனக்கள் உண்மையிலேயே மீண்டு எழும்ப முடியாத அளவிற்கு நஷ்டத்தில் இருக்கும். குறைந்த விலை நல்ல PE RATIO என்று வாங்கி விடக் கூடாது என்பதற்கே இந்த இரண்டாவது விஷயம்.

மீண்டும் ஒரு முறை :

1.ஒரு பங்கினை  வாங்கு முன் குறைவான PE RATIO உடைய பங்குகளை வாங்க வேண்டும். எவ்வளவுகெவ்வளவு குறைவான விலையில் வாங்குகிறோமோ, அவ்வளவு லாபம் வர மிக அதிக வாய்ப்பு உண்டு. பொறுமை காத்தல் அவசியம்.
2. PE RATIO குறைவாக உள்ள பங்கினை தேர்ந்தெடுத்து வாங்கு முன் நாம் கவனிக்க வேண்டிய இரண்டாவது விசயம், அந்த நிறுவனத்தை ஆரம்பித்த நபர்கள் கட்டாயம் 50%, அந்த நிறுவனத்தை நம்பி முதலீடு செய்த நிறுவனங்கள்  10 % - 15% பங்குகள் வைத்து இருக்க வேண்டும்.


                                                                                                                                          தொடரும்....

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500535386.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.